தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூச விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், சென்னை வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தைப்பூசத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோயிலில் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் 4ஆம் படை வீடான கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேர் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பால் குடம் ஏந்தி வந்தும், காவடி மற்றும் அலகு குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை முதலே பாதயாத்திரையாக வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், வயலூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேனிமலை முருகன் கோயிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.