மயிலாடுதுறையில் நடைபெற்ற விஸ்வநாதர், லட்சுமி நாராயண பெருமாள் கோயில்களின் கும்பாபிஷேக விழாவில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்துடன் பங்கேற்று தரிசனம் செய்தார்.
பெருந்தோட்டம் பகுதியில் மிக பழமையான விசாலாட்சி சமேத விஸ்வநாதர் மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. சிதிலமடைந்த இந்த இரு கோயில்களில் புனரமைப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்தன.
தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க இரு கோயில்களின் கோபுர கலசங்கள் மீதும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குடும்பத்துடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.