தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான திருவிழா உபகோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்தனர். தை மாத பூச நட்சத்திர தினத்தில் உதித்த சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு நடத்த பழனி அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். காலை 7 மணியளில் சூரியன் உதயமானபோது அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் சூடம் ஏற்றி தீபாராதனை காட்டி சூரிய பகவானை வழிபட்டனர்.
பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மலையேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளி விட்டு குழுக்களாக செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பழனி கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ள நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் மயக்கமடைந்ததால் பதற்றம் நிலவியது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமலேயே சொந்த ஊர் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை உரிய ஏற்பாடுகளை செய்யாததே கூட்ட நெரிசலுக்கு காரணம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.