மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனை அடுத்து கதிரறுப்பு திருவிழா விமரிசையாக நடைபெற்ற நிலையில், தைப்பூச தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை அவுதா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன் முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை வந்தடைந்தார்.
பின்னர், சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி தேரை வடம்பிடித்து இழுப்பதற்காக அனுப்பானடியைச் சேர்ந்த இளைஞர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், கோயில் நிர்வாகம் சார்பில் கிராமத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.