கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயில் 100 மீட்டர் தூரத்தில் கொடியசைத்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூர் பகுதியில் கரூர் – திருச்சி ஒருவழி ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர், காலைக்கடன் கழிக்க சென்றபோது ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து உடனடியாக இருப்பு பாதை சரிபார்க்கும் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அங்கு வந்த ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சோதனை செய்தனர். அப்போது, அந்த பகுதியில் வந்த எர்ணாகுளம் – காரைக்கால் விரைவு ரயிலை 100 மீட்டர் தூரத்தில் சிவப்பு கொடியசைத்து ரயில்வே ஊழியர்கள் நிறுத்தினர்.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால், விரைவு மற்றும் பயணிகள் ரயில்கள் 45 நிமிடங்கள் தாமதமாக சென்றன.