சென்னை போரூரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு பொதுமக்களோடு சேர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
போரூரில் உள்ள சமுதாய நல மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் காலை 7 மணி முதலே நோயாளிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. குறிப்பாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட மூதாட்டி ஒருவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நேரம் ஆக ஆக பொறுமை இழந்த நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்திருந்த நடிகர் கஞ்சா கருப்பும் மக்களோடு சேர்ந்து கடுமையான கேள்விகளை முன்வைத்தார்.
மருத்துவர் அறையில் ஏசி ஓடிக்கொண்டிருக்க டாக்டர் எங்கே சென்று விட்டார் என கேள்வி எழுப்பினார். தலைநகர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஏன் இத்தகைய நிலை எனவும் கடுமையாக கேள்வி எழுப்பினார்.