நாகர்கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் பணியாற்றும் ஊழியரை, இளைஞர்கள் இழுத்து சென்று தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், முட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பிரமோத் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர்களுக்கும், பிரமோத்தும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், பிரமோத்தை இழுத்து சென்று நடுரோட்டில் வைத்து சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். பிரமோத்தை காப்பாற்ற வந்த பக்கத்து கடைக்காரர்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், படுகாயமடைந்த பிரமோத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.