பெங்களூருவில் நடைபெற்றுவரும் சர்வதேச விமானப்படை கண்காட்சியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா நாடுகளின் விமானங்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தியிருப்பது பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது. உலக நாடுகளுக்கு இந்தியாவின் வான் வலிமையை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்று வரும் விமானப்படை கண்காட்சி குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய ராணுவத்தின் சார்பாக நடத்தப்படும் ஏரோ இந்தியா எனப்படும் விமானக் கண்காட்சி கடந்த 10ம் தேதி தொடங்கியுள்ளது. 1996ம் ஆண்டு சாதாரண விமானக் கண்காட்சியாக தொடங்கிய ஏரோ இந்தியா கண்காட்சி தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கண்காட்சியாக உருவெடுத்திருக்கிறது .
ஏரோ இந்தியாவில் பங்கேற்றுள்ள நூற்றுக்கும் அதிகமான போர் விமானங்களோடு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் போர் விமானங்கள் முதன்முறையாக பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தியிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிலும் எந்த ரேடாரிலும் சிக்காத வகையில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஸ்டெல்த் பண்புகளை கொண்ட ஐந்தாம் தலைமுறை விமானமாக கருதப்படும் ரஷ்யாவின் அதிநவீன போர் விமானமான எஸ்.யு – 57 விமானமும் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருப்பது பார்வையாளர்களை பரவசப்படுத்தியுள்ளது.
மேலும் அமெரிக்காவின் எப் -16, எப் -35, கேசி -135 போன்ற விமானங்களும் பங்கேற்றிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் ஏரோ இந்தியாவை நோக்கி திரும்பச் செய்திருக்கிறது.
இந்தியாவின் அடுத்த தலைமுறை விமானமான ஹெச்டிடி 40 ரக விமானம், உள்நாட்டின் விமானப் போக்குவரத்தின் பெருமையான எல் சி ஏ எம்கே-1ஏ ரக விமானம், பல்வேறு பயன்பாட்டுக்கு உதவும் எல் யூ ஹெச் ஹெலிகாப்டர், இந்திய விமானப்படையின் முதுகெலும்பாக கருதப்படும் எஸ் யு- 30 எம் கே ஐ ரக விமானம், இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக விமானமான ஹன்சா, உலகின் மேம்படுத்தப்பட்ட எப் -35 போர் விமானம், ரஷ்யாவின் அதிநவீன எஸ்.யு -57 போர்விமானம் என உலகின் அதி நவீன போர் விமானங்கள் பங்கேற்று ஏரோ இந்தியா கண்காட்சிக்கு கூடுதல் பெருமை சேர்த்திருக்கிறது.
வான்வெளியில் வியக்கத்தக்க சாகசங்களை புரிந்த தேஜஸ் போர் விமானங்கள் காட்டிய வர்ணஜாலங்களும், சுழன்று சுழன்று வட்டமடித்த அசாத்திய திறமைகளும் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இலகு ரக பிரிவில் கில்லியாக திகழும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நான்காவது தலைமுறை விமானமாக இருக்கும் தேஜஸ் விமானமும், சுர்ய கிரண் ஏரோபோட்டிக் குழுவின் எம் கே -132 ரக சிறிய ரக விமானங்களும் சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வடிவமைக்கப்பட்டுள்ள இரட்டை எஞ்சின் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானமான ஏ.எம்.சி.ஏ போர் விமானமும் முதன்முறையாக இக்கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. சோதனைகள் முழுமையாக நிறைவடைந்தபின் 2035 ஆம் ஆண்டுக்குள் இந்த விமானம் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது.
வான்வெளி சார்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சாதனைகளை காட்சிப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதோடு இந்தியாவின் வான் வலிமையை ஒட்டுமொத்த உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் இந்த ஏரோ இந்தியா கண்காட்சி அமைந்திருக்கிறது.