தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் ஏராளமான பக்தரகள் திரண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக முருகப்பெருமானுக்கு பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், தீமிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தைப்பூசத்தை ஒட்டி கோவை பெரியநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் திரளானோர் சாமி தரிசனம் செய்தனர்.
கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூச தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தை ஒட்டி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். அதிகாலையிலேயே பக்தர்கள் குடும்பத்துடன் வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சாலையில் பல மணி நேரம் கால்கெடுக்க நின்று, பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.