குப்பை கிடங்கு மோசடி புகார் தொடர்பாக தஞ்சை மாநகராட்சியின் முன்னாள் ஆணையரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஜெபமாலைபுரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக செயல்படும் குப்பை கிடங்கில் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்களில் குப்பைகளை தரம் பிரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், முறையாக குப்பைகள் தரம் பிரிக்காமல், 14 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதனடிப்படையில் மாநகராட்சி முன்னாள் ஆணையர்களாக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரன், சரவணக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி, முன்னாள் ஆணையர் சரவணக்குமாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர்.
2 மணிநேர விசாரணையின்போது எழுப்பிய கேள்விகளுக்கு மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதாக சரவணக்குமார் பதில் அளித்ததாகவும், வரும் 26ஆம் தேதி ஜானகி ரவீந்திரனிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.