இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பாரிஸில் இன்று நடைபெற்ற 14வது இந்தியா-பிரான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரிகள் மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டாக உரையாற்றினர்.
பாதுகாப்பு, விண்வெளி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, போன்ற துறைகளில் கவனம் செலுத்தும் வகையில், இரு தரப்பிலிருந்தும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் இந்த மன்றத்தில் ஒன்று கூடினர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி விரிவடைந்து வரும் இந்தியா-பிரான்ஸ் வணிக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பையும், இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திசார் கூட்டாண்மைக்கு அது அளித்துள்ள உத்வேகத்தையும் குறிப்பிட்டார்.
அதன் நிலையான அரசியல் மற்றும் கணிக்கக்கூடிய கொள்கைச் சூழல் அமைப்பின் அடிப்படையில், உலகளாவிய முதலீட்டு இடமாக இந்தியாவின் ஈர்ப்பை அவர் எடுத்துரைத்தார்.
சமீபத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசுகையில், காப்பீட்டுத் துறையில் இப்போது 100% அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் சிவில் அணுசக்தித் துறையில் தனியார் பங்கேற்பு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
சுங்கக் கட்டணம் சீரமைக்கப்பட்டது, வாழ்க்கை முறையை எளிதாக்குவதற்காக எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரிவிதிப்பு முறை கொண்டுவரப்பட்டது ஆகியவற்றை சுட்டிக்காட்டி சீர்திருத்தங்களைத் தொடர்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைக் குறிப்பிட்டார்.
நம்பிக்கை அடிப்படையிலான பொருளாதார நிர்வாகத்தை நிறுவுவதற்காக ஒழுங்குமுறை சீர்திருத்தங்களுக்கான உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த சில ஆண்டுகளில் 40,000க்கும் மேற்பட்ட இணக்க ஏற்பு நடைமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ச்சியில் பாதுகாப்பு, எரிசக்தி, நெடுஞ்சாலை, சிவில் விமானப் போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், நிதி தொழில்நுட்பம் மற்றும் நிலையான வளர்ச்சித் துறைகளில் வழங்கப்படும் மகத்தான வாய்ப்புகளைப் பார்வையிடுமாறு பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்தியாவின் திறன்கள், திறமை மற்றும் புதுமை, அதன் புதிதாகத் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்தி, குவாண்டம், முக்கியமான தாதுக்கள் மற்றும் ஹைட்ரஜன் பணிகளில் உலகளாவிய பாராட்டு மற்றும் ஆர்வத்தை விளக்கிய அவர், பரஸ்பர வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்தத் துறைகளில் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். புதுமை, முதலீடு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கூட்டாண்மைகளை வளர்ப்பதில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்-நோயல் பரோட், பிரான்சின் பொருளாதாரம், நிதி மற்றும் தொழில்துறை, டிஜிட்டல் இறையாண்மை அமைச்சர் எரிக் லோம்பார்ட் ஆகியோரும் உரையாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.