திருவள்ளூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், குமரஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி கோயிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய நிலையில், நள்ளிரவு கோயிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர்.
வெல்டிங் மிஷின் மூலம் கருவறை பூட்டை உடைக்க முயன்ற நிலையில், பூட்டை உடைக்க முடியாததால் அங்கிருந்த ஒலிபெருக்கியை திருடி சென்றுள்ளனர். காலை கோயிலை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்ட பூசாரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.