அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அத்திகடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பின் சார்பில் ஈபிஎஸ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேனரில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லை எனக்கூறி செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணித்தார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில், அவரது வீட்டிற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் அதிமுக தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். அவர்களுடன் பொதுக்கூட்டங்கள், விழா கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக செங்கோட்டையன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த அவர், தனது வீட்டிற்கு தொண்டர்கள் வருவது வழக்கமான ஒன்றுதான் எனவும், இபிஎஸ்-க்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா தொடர்பான பிரச்னை முடிவடைந்து விட்டதாகவும் கூறினார்.