தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தேர்வு தொடர்பாக தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, அடிப்படை உறுப்பினர்கள் மூலம் மட்டுமே தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைவர் பதவிக்கான உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும் கட்சியின் சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர் நிறுவன உறுப்பினராக 4 ஆண்டுகள் பதவி வகித்திருக்க வேண்டும் எனவும், மாநில அளவில் 4 ஆண்டுகள் நிர்வாகியாக பணியாற்றி இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தலைவர் பதவி விலகினால் உடனடியாக பொதுக்குழு கூடி இடைக்கால தலைவரை தேர்வு செய்யலாம் எனவும், கட்சியின் அவசர தேவை கருதி தலைவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு என்றாலும் அதனை பொதுக்குழு ஏற்க வேண்டும் என்றும் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல், வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து வித கோப்புகளில் கையெழுத்திடும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே உண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் அனைத்து விதமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் தலைவரே பொறுப்பாளராக இருப்பார் எனவும், கட்சிக்காக வாங்கப்படும் அல்லது விற்கப்படும் சொத்துக்கள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தலைவர் பெயரில் மட்டுமே நடைபெறும் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.