வெள்ளியின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், சேலத்தில் வெள்ளி ஆபரண தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
அண்மை காலத்தில் தங்கத்தின் தாறுமாறான விலை உயர்வு, தங்க நகைகள் வாங்க ஆசைப்படும் நடுத்தர வர்க்கத்தினரை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது ஒருபுறமிருக்க வெள்ளி விலையும் மளமளவென உயர்ந்து வருவது, மக்களை மட்டுமல்லாமல் வெள்ளி ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களையும் நிலைகுலைய செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஒரு கிலோ வெள்ளி பார் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விலை உயர்ந்து ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருகிறது.
இந்த விலை உயர்வு வெள்ளி ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் தலையில் இடியாக இறங்கியுள்ள நிலையில், சேலத்தில் வெள்ளி ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 40 சதவீத தொழிலாளர்கள் பிழைப்புக்காக மாற்று தொழிலுக்கு படையெடுத்துள்ளனர். மணியனூர், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும், வாழப்பாடி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட புறநகரப் பகுதிகளிலும் கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ள நிலையில், அதில் 6 லட்சம் தொழிலாளர்கள் வரை வெள்ளி கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் கூட இயந்திரங்கள் மூலமே வெள்ளி கொலுசுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் தொழிலாளர்களின் கைவண்ணத்தால் வெள்ளி கொலுசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே சேலத்தில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகளுக்கு நாடு முழுவதும் மவுசு அதிகம்.
வழக்கமான நாட்களில் 50 முதல் 70 டன் வரையிலும், பண்டிகை காலங்களில் 100 முதல் 125 டன் வரையிலும் வெள்ளி கொலுசுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளி மாவட்டங்கள் முதல் வெளி மாநிலங்கள் வரை விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கை. ஆனால் தற்போது வெள்ளியின் இந்த தாறுமாறான விலை உயர்வு, வெள்ளி ஆபரண உற்பத்தியில் எதிரொலிப்பதால் வெள்ளி கொலுசு விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வியாபாரிகளிடம் இருந்து வரும் ஆர்டர்கள் குறைந்து வருவதால் ஏராளமான பட்டறை உரிமையாளர்கள் லாபம் பார்க்க முடியாமல் தங்கள் பட்டறைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சேலத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் கிட்டதட்ட 6 ஆயிரம் வெள்ளி பட்டறைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போது வெறும் 4 ஆயிரம் பட்டறைகளிலேயே வெள்ளி கொலுசு தயாரிப்பு நடைபெற்று வருகிறது. இதனால் மூடப்பட்ட வெள்ளி பட்டறைகளில் பணியாற்றி வந்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள், தங்கள் பிழைப்பிற்காக கார்மென்ட்ஸ் வேலை, கோழிப்பண்ணை வேலை, கட்டட வேலை என மாற்று தொழில் தேடி செல்ல தொடங்கிவிட்டனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் சேலத்தில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் பணி முற்றிலுமாக நின்றுவிடும் என வெள்ளி பட்டறை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.
சேலத்தில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழிலை காக்கும் வகையிலும், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டும் தங்கத்திற்கு தர நிர்ணயம் செய்வதுபோல், வெள்ளிக்கும் தர நிர்ணயம் செய்ய வேண்டும், வெள்ளியை ஆபரண பட்டியலில் இருந்து நீக்கி வரிக்குறைப்பு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.