மதுரை மாட்டுத்தாவணியில் சாலையில் நடுவே இருந்த தோரணவாயிலை இடிக்கும்போது தூண் இடிந்து விழுந்த விபத்தில் பொக்லைன் ஆப்ரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5ஆம் உலக தமிழ் மாநாட்டை முன்னிட்டு 1981ஆம் ஆண்டு மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் நக்கீரர் தோரண வாயில் கட்டப்பட்டது. தற்போது மாட்டுத்தாவணி பகுதியில் பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு வணிக வளாகங்கள் உருவானதால், தோரண வாயில் வழியாக நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
போக்குவரத்து இடையூறாக உள்ள தோரண வாயிலை இடிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், நக்கீரன் தோரண வாயிலை பாதுகாப்புடன் இடித்து அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள நக்கீரர் தோரண வாயில் இடிக்கும் பணியின்போது தோரண வாயிலின் ஒருபுறம் உள்ள தூண் திடீரென இடிந்து பொக்லைன் இயந்திரத்தின் மீது விழுந்தது.
இதில், பொக்லைன் ஆப்ரேட்டர் நாகலிங்கம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒப்பந்ததாரர் நல்லதம்பி படுகாயமடைந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.