கன்னியாகுமரி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் குடியேறிவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த மக்களுக்காக 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
இதுவரை திறப்பு விழா நடக்காத நிலையில் இந்த வீடுகள் வேறு சிலருக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்பிற்கு இலங்கை தமிழர்கள் சிலர் குடும்பங்களுடன் சென்று வசித்துள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற அதிகாரிகள் திறப்பு விழா காணாத குடியிருப்பில் வசித்த இலங்கை தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ஏராளமான இலங்கை தமிழர்கள் குவிந்தனர். கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக திறந்து தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வீடுகளை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.