பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆயுதப்படை காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த 29 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 3 குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர் சிறிய அளவிலான நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் ஆயுதப்படை காவலர் பிரபாகரன் என்பவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் ஆயுதப்படை காவலர் பிரபாகரன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.