பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறையில் வடக்கு மண்டல இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த மகேஷ் குமார் மீது பெண் காவலர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
சமூக வலைதளம் மூலம் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாவும், பரிசு பொருட்கள் கொடுத்ததாகவும் கூறி புகார் அளித்ததாக தெரிகிறது. டிஜிபி சங்கர் ஜிவாலிடம் பெண் காவலர் அளித்த புகாரை, டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாக கமிட்டி விசாரித்தபோது, மகேஷ்குமார் மேலும் ஒரு பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து, விசாக கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து, மகேஷ் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
மேலும், அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள மாநில உள்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பரிந்துரைத்தார். இதனடிப்படையில், சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது.