சென்னை வியாசர்பாடியில் உள்ள பழமையான கோயில் குளத்தை அறநிலையத்துறையே ஆக்கிரமித்து, அரசு பார்க்கிங் இடமாக மாற்றி வாடகை வசூலித்து வருவதால் பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
திரைப்பட காமெடி காட்சியொன்றில் நடிகர் வடிவேலு, “ஐயோ என் கிணத்த காணோம்… என் கிணத்த காணோம்” என கதறி கதறி அழுது நடித்திருப்பார். அதேபோல, சென்னை வியாசர்பாடி பகுதி மக்களும் தங்கள் பகுதியில் இருந்த “கோயில் குளத்த காணோம்” என பரிதவிப்பதுடன், அறநிலையத்துறை மௌனம் கலைத்து தங்கள் பிரச்சனைக்கு தீர்வளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், மிகப்பழமையான இரவீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான குளம் தற்போது இருந்த இடமே தெரியாமல் மாயமாகி, கோயில் பார்க்கிங் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதே அப்பகுதி மக்களின் பிரச்சனைக்கு முக்கிய காரணம்.
அங்குள்ள EH சாலையில் சுமார் 60 ஆயிரம் சுதுர அடி பரப்பளவில், இரவீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான குளம் நூற்றாண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. அந்த குளத்தை ஒட்டிய கோயில் நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்கள் குடியிருப்புகளை கட்டிய நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றி கோயில் நிலத்தை திருப்பி ஒப்படைக்குமாறு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது கோயில் நிர்வாகம். அத்துடன் கோயில் குளத்தை விரைவில் தூர்வாரி, மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்றப்போவதாகவும் அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
ஆனால் நடந்ததோ அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது. கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டபோது, அதனுடன் சேர்த்து கோயில் குளமும் மூடப்பட்டது. குளம் இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் தரைமட்டமாக்கப்பட்ட அந்த இடத்தில், கோயில் நிர்வாகத்தினர் பார்க்கிங் அமைத்து வாடகை வசூலித்து வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
பல ஆண்டுகளாக அப்பகுதிகளில் பெய்யும் மழைநீர் வடிந்து குளத்தை சென்றடைந்ததால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருந்தது. ஆனால் தற்போது குளம் மூடப்பட்டுவிட்ட நிலையில் மழைநீர் வடிய வழியின்றி, வீடுகளை சூழ்ந்துகொள்வது அப்பகுதி மக்களை அதிருப்தியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
நியாயம் கேட்கச் செல்லும் பொதுமக்கள் மீது பொய்க்குற்றச்சாட்டுகளை கூறும் கோயில் நிர்வாகம், அவர்கள் மீது காவல் துறையை ஏவி மிரட்டல் விடுப்பதாகவும், திருக்கோயில் பெயரைச் சொல்லி ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வாக அங்குள்ள பார்கிங்கை அகற்றி, கோயில் குளத்தை மீட்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து குளம் மீட்டெடுக்கப்படும் பட்சத்தில், அதனைச் சுற்றி நடைபயிற்சி தடமும், இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக் கூடமும் அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.