பாரீசில் நடந்த AI உச்சி மாநாட்டில் AI குறித்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மறுத்துவிட்டன. AI தொழில்நுட்பம் தொடர்பாக, உலகளாவிய ஒருமித்த கருத்தை உருவாக்க, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான முயற்சிகளுக்கு இது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
AI தொழில்நுட்பத்தின் ஆற்றல் அற்புதமானது. AI தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நாட்டின் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. குறிப்பாக, உலக அளவில் நிர்வாகம், பொருளாதாரம் என அனைத்து துறைகளையும் AI முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது.
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, AI தொழில் நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு அதிக முதலீடுகளை செய்துவருகிறது. இதற்கிடையே சீனா, Deep Seek என AI துறையில் தனது ஆதிக்கத்தை விரிவு படுத்தி வருகிறது. இந்தியாவும் பிரான்சும் AI துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்தச் சூழலில், செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் சவால்கள், எதிர்மறை விளைவுகள் குறித்தும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமனதாக உள்ளது.
AI தொழில் நுட்பத்தை எவ்வாறு நிர்வாகம் செய்வது ? AI ஏற்படுத்தும் பாதிப்புக்களில் இருந்து எப்படி மனித குலத்தைக் காப்பாற்றுவது ? தரவு பாதுகாப்பு மற்றும் நவீன யுத்தத்துடன் பின்னிப் பிணைந்துள்ள AI தொழில் நுட்பத்தை எப்படி ஒழுங்குபடுத்துவது ? இந்த கேள்விகளுக்கு எல்லாம் சர்வதேச அளவில் AI குறித்த சர்வதேச விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்க , AI உச்சிமாநாடு 2023 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
கடந்த 6 ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரையில் பாரீசில் இந்த ஆண்டுக்கான AI உச்சி மாநாடு நடந்தது. இந்த AI உச்சி மாநாட்டை , பிரதமர் மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் இணைந்து தலைமை ஏற்று வழி நடத்தினர்.
AI துறையின் சாத்தியமான ஆபத்துக்கள் குறித்த கவலைகளை AI உச்சிமாநாட்டில் பங்கேற்ற அனைத்து நாடுகளும் எழுப்பியுள்ளன.
இந்த நூற்றாண்டில் மனிதகுலத்துக்கான குறியீட்டை செயற்கை நுண்ணறிவு எழுதி வருவதாகவும், மனித வரலாற்றின் பிற தொழில்நுட்ப மைல்கற்களிலிருந்து AI மிகவும் வித்தியாசமானதாக உள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், AI யில் பகிரப்பட்ட தரவுகளை நிலைநிறுத்தவும், AI யால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்யவும், முழுமையான நம்பிக்கையை வளர்க்கவும், தரநிலைகளைக் கட்டுப்படுத்த உலகளாவிய கூட்டு முயற்சிகள் தேவை என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் போட்டியாக, அவர்களைச் சார்ந்து இருக்காமல், ஐரோப்பாவை முன்னிறுத்த வேண்டுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மேலும், பொது நம்பிக்கையை வளர்ப்பதற்கும், சர்வதேச நிர்வாகத்தை உருவாக்கவும், AI துறைக்கு உலகளாவிய விதிகள் தேவை என்பதையும், பிரான்ஸ் அதிபர் மக்ரோன் வலியுறுத்தினார்.
மனித உரிமை ,பாலின சமத்துவம்,மொழியியல் பன்முகத் தன்மை,நுகர்வோர் மற்றும் அறிவுசார் சொத்துரிமை என பல்வேறு விஷயங்கள் குறித்த ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கும் விதமாக, ஒரு கூட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்தக் கூட்டுப் பிரகடனத்தை இந்தியா, சீனா உள்ளிட்ட 60 நாடுகள் ஆதரித்துள்ளன. எதிர்பாராத வகையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்துள்ளன.
உலகளாவிய AI நிர்வாகம் மற்றும் தேசிய பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து போதுமான அளவு இந்த பிரகடனம் பேசவில்லை என்று இங்கிலாந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், இங்கிலாந்தின் தேசிய நலன்களுடன் இணைந்த AI முயற்சிகளை மட்டுமே இங்கிலாந்து ஆதரிக்கும் என்றும் இங்கிலாந்து பிரதமரின் செய்தித் தொடர்பாளர் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
AI தொழில் நுட்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் கடுமையான விதிமுறைகளை கொண்டு வர ஐரோப்பா வற்புறுத்துகிறது. கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திடாத இங்கிலாந்தின் நடவடிக்கை, இங்கிலாந்து- ஐரோப்பாவிடமிருந்து முரண்பட்டு நிற்பதையே சுட்டிக் காட்டுகிறது.
“அமெரிக்கா முதலில்” என்ற அடிப்படையில், அதிபர் ட்ரம்ப்பின் தொழில்நுட்பக் கொள்கையை வலியுறுத்திய அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸ், ஐரோப்பிய ஒழுங்குமுறையைக் கண்டித்தும் , AI மூலமாக சீனா நடத்தும் தரவுகள், திருட்டுக்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தால் அதிக உற்பத்தித் திறன் கொண்ட அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறிய அமெரிக்க துணை அதிபர், அதிகப்படியான கட்டுப்பாடு என்பது ,வேகமாக வளர்ந்து வரும் AI துறையை முடக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எலான் மஸ்க் கின் எக்ஸ் தளம் மீது ஐரோப்பா கட்டுப்பாடுகளை விதித்தால், நேட்டோ நாடுகளுடனான உறவுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க துணை அதிபர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் அதிகமாகி வருவதையே அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்ஸின் உரை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் AI உச்சிமாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தை ஐரோப்பிய யூனியன் ஆதரித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
செயற்கை நுண்ணறிவின் அசுர வளர்ச்சியில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவே இந்த AI உச்சி மாநாட்டின் கூட்டுப் பிரகடனத்தைத் தொழில் நுட்ப ஆய்வாளர்கள் பார்க்கிறார்கள். மேலும் அமெரிக்கா இந்த பிரகடனத்தை ஒருபோதும் ஆதரிக்காது என்றும் கூறுகிறார்கள்.