சினிமாவில் மட்டுமல்லாது நிஜவாழ்க்கையிலும் எம் ஜி ஆரை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். கொள்கை பாடலில் தொடங்கி கட்சியின் சட்டவிதிகள் வரை எம் ஜி ஆரை பின்பற்றும் விஜய் குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.
வசீகரா எனும் திரைப்படத்தில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக நடிக்கத் தொடங்கி, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடல், கொள்கைகளை அறிவிக்கும் மாநாடு என அனைத்து இடங்களிலும் எம்.ஜி.ஆரை விட்டுக் கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
தன்னுடைய படங்களில் பல இடங்களில் எம்.ஜி.ஆரின் காட்சிகளை வைத்ததோடு நிறுத்திவிடாமல் அவ்வப்போது நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்விலும் எம் ஜி ஆரின் பெருமைகளையும் பண்புகளையும் சுட்டிக்காட்ட ஒருபோதும் விஜய் தயங்கியதே இல்லை. சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி எம்.ஜி.ஆரையே தனது வழிகாட்டியாக பின்பற்றுவது போல் விஜய் செயல்பட்டு வருகிறார்.
தமிழக வெற்றிக்கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கிய பின் தான் ஒப்புக்கொண்ட படத்தோடு திரையுலகை விட்டு முழுமையாக விலகுவதாக அறிவித்திருக்கும் விஜயின் கடைசி படத்திற்கு ஜனநாயகன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கான ஜனங்களின் நாயகனாக திகழ்ந்த மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரை மையமாக வைத்தே அப்படத்திற்கு ஜனநாயகன் என பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனவும் பேசப்படுகிறது.
அந்த பேச்சுக்கு வலுசேர்க்கும் வகையில் அண்மையில் வெளியான அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் நான் ஆணையிட்டால் எனும் வரிகளோடு, எம்ஜி ஆரைப் போலவே விஜய்யும் சாட்டையை சுழற்றும் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், தன் மானசீக குருவாக எம் ஜி ஆரை ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்பது அவர் தொடங்கிய கட்சியின் சட்டவிதிகள் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளன. அந்த சட்ட விதிகளில் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் கூடியே கட்சியின் தலைவரை தேர்வு செய்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டர்களின் விருப்பத்திற்காக அரசியல் கட்சியை தொடங்கி தான் உயிரோடு இருக்கும் வரை அக்கட்சியை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். அரசியல் கட்சி தொடங்கியது முதல் தன் உயிர் பிரியும் வரை தொண்டர்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்த எம் ஜி ஆர், வகுத்துக் கொடுத்த சட்டவிதிகள் தான் தற்போதுவரை அதிமுகவை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.
எம்.ஜி.ஆர் மறைந்து ஆண்டுகள் பல கடந்தாலும் அவருடைய நினைவலைகள் இன்னமும் மக்கள் மனதில் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றன.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக , எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் என நான்கு பிரிவுகளாக செயல்பட்டு அதன் வாக்குவங்கியை படிப்படியாக இழந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர்ந்து பத்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருவதால் அக்கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்த நேரத்தில் அதனை சாதகமாக பயன்படுத்தி எம்.ஜி.ஆரின் ஆதரவாளர்கள், ரசிகர்கள், அனுதாபிகளின் வாக்குகளைப் பெறவே இந்த யுக்தியை தவெக தலைவர் விஜய் கையாண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
தமிழக அரசியல் களத்தில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி எம்.ஜி.ஆரின் வழியிலேயே ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் விஜய்யின் திட்டம் வெற்றியடையுமா என்பதை அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலும், மக்களுமே முடிவு செய்வார்கள்.