கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் அரசுப் பள்ளியில் தவறுதலாக மாற்றப்பட்ட தலைமை ஆசிரியை மாலதியை மீண்டும் அதே பணியிடத்தில் அமர்த்த வேண்டும் என தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் கணபதி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கடந்த டிசம்பர் மாதம் புகார் எழுந்தது. அதனடிப்படையில் தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் நீதியரசர் தமிழ்வாணன் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
ஆசிரியர்களே பட்டியலின மாணவர்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், சாதி ரீதியாக திட்டியதாகவும் தெரிவித்தார். மாணவர்களை தாக்கிய உடற்கல்வி மற்றும் கணித ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறினார்.
இந்த விவகாரத்தில் தவறுதலாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மாலதியை மீண்டும் அதே பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியமர்த்த பரிந்துரைக்கப்படும் என்றும் தமிழ்வாணன் தெரிவித்தார்.