சாத்தூர் அருகே கிராவல் மண் கொள்ளை அடித்தவர்களை கைது செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், விருதுநகர் மாவட்டம் இ.குமார லிங்கபுரத்தில் 6 மாதங்களுக்கும் மேலாக கிராவல் மண் கொள்ளை அடிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
வண்டல் மண் அள்ளக்கோரி விண்ணப்பித்த பெண்ணின் அனுமதி சீட்டைப் பயன்படுத்தி, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் உறவினர் ஒருவர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களைக் கொள்ளைய அத்திருக்கிறார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கனிமவளக் கொள்ளை ஊடகங்களில் செய்தியாக வெளிவந்ததும் வட்டாட்சியர் உட்பட 7 பேரைப் பணி நீக்கம் செய்ததாக கூறியுள்ள அண்ணாமலை, கனிமவளக் கொள்ளை நடப்பது தெரிந்தும் திமுகவினர் என்பதால் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்துவிட்டு தற்போது கீழ்மட்ட அதிகாரிகளை பலிகடா ஆக்கி உள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எனவே, கீழ்மட்ட அதிகாரிகள் மீதான பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும், அமைச்சர் மற்றும் மாவட்டத்தில் அதிகாரமிக்க அதிகாரிகள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கனிமவளக் கொள்ளையில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.