ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளிதழில் வெளியான கட்டுரையை கொண்டு ஆளுநருக்கு எதிராக மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளது.
உயர் பதவி வகிக்கும் முதலமைச்சர், நீதிமன்ற விசாரணைக்கு புறம்பாக உள்ள விஷயத்தில் பாரபட்சம் நிறைந்த நாளிதழின் கருத்தினை தனது விரக்தியை வெளிப்படுத்தும் ஊன்றுகோலாகவும், நிர்வாகத் தோல்வி மற்றும் அரசியல் பாதுகாப்பின்மையை மறைக்கவும் பயன்படுத்தி இருப்பது பரிதாபத்துக்குரியது எனவும் விமர்சனம் செய்துள்ளது.
மேலும், முதலமைச்சர் நினைப்பதை விட தமிழ்நாட்டு மக்கள் மிகவும் புத்திசாலிகள் எனவும் ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.