கோட்டக்குப்பத்தில் ஆதி திராவிடர் மக்களுக்கு வழங்க வேண்டிய தாட்கோ வணிக வளாக கடைகளை அரசு வழங்காததால் கடைகளில் பூட்டை உடைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி நகராட்சியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி எதிரே, ஆதி திராவிடர் மக்கள் மேம்பாட்டிற்காக 1997ம் ஆண்டு 10 கடைகளை கொண்ட வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், 29 ஆண்டுகளாகியும் இதுவரை பயனாளிகளுக்கு கடைகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் வணிக வளாக கடைகள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் பூட்டப்பட்டிருக்கும் வணிக வளாகத்தை திறக்கக்கோரி விசிகவினர், நகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வணிக வளாக ஷட்டரின் பூட்டுகளை உடைத்து திறந்ததுடன், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.