எஃப்-35 ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால், நேட்டோ நட்பு நாடுகள், இஸ்ரேல் மற்றும் ஜப்பானை உள்ளடக்கிய நாடுகளின் (ELITE CLUB) கிளப்பில் இந்தியா இணைந்துள்ளது. பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் F-35 ரக விமானங்களின் விற்பனை இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் மிகவும் மேம்பட்ட மற்றும் பல்துறை போர் விமானங்களில் ஒன்று தான் F-35 ஸ்டெல்த் போர் விமானம். இது, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்காக லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) நிறுவனம் உருவாக்கிய அதிநவீன போர் விமானம் ஆகும்.
F-35 இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் விலையுயர்ந்த ஒரு போர் விமானமாகும். F-35 ரக போர் விமானத்தின் மேம்பாடு, உற்பத்தி மற்றும் பராமரிப்பு செலவு உட்பட மொத்தச் செலவு சுமார் 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
F-35 லைட்னிங் II (F-35 Lightning II) என்று அழைக்கப்படும், F-35 ஸ்டெல்த் போர் விமானம் மூன்று வகைகளில் வருகிறது.
இந்த ஜெட் விமானங்கள் சூப்பர்சோனிக் வேகத்தில் கண்டறியப்படாமல் செயல்பட முடியும்.
F-35A என்பது முதல் வகை F-35 போர் விமானம் ஆகும். இது, வழக்கமான புறப்படுதல் மற்றும் தரையிறங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
பெரும்பாலும் இந்த விமானத்தையே முதன்மையாக அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருகிறது. இதன் விலை சுமார் 80 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது 695 கோடி ரூபாயாகும்.
இரண்டாவது வகை F-35 போர் விமானம், F-35B என்று குறிப்பிடப் படுகிறது. மிக குறுகிய நொடிகளில் புறப்படுவதற்கும், செங்குத்தாக தரையிறங்குவதற்கும் F-35B போர்விமானம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
இந்த வகை விமானங்கள் அமெரிக்க மரைன் கார்ப்ஸால் (US Marine Corps ) இயக்கப்படுகிறது. நிலம், கடல் மற்றும் வான்வழிப் போருக்குப் பயிற்சியளிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதப் படைகளின் ஒரு கிளைதான் Marine Corps ஆகும். இதன் விலை 10,005 கோடி ரூபாயாகும்.
மூன்றாவது வகை F-35C போர் விமானம் ஆகும். இந்த வகை போர் விமானங்கள் பிரத்யேகமாக அமெரிக்க கடற்படைக்காக உருவாக்கப்பட்டதாகும். இதன் விலை 9,622 கோடி ரூபாயாகும்.
F -35 ரக போர் விமானத்தை இயக்குவதற்கும் அதிக செலவாகும் என்று கூறப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 31 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.
F-35 போர் விமானங்கள் 6,000 கிலோ முதல் 8,100 கிலோ வரை கனரக ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை ஆகும்.
கடந்த ஆண்டு, பெங்களூரு யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் இராணுவக் கண்காட்சியான ஏரோ இந்தியாவின் 15வது நிகழ்வில், F-35 போர் விமானங்கள் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சொந்த பயன்பாட்டுக்கு மட்டும் உருவாக்கவில்லை. விமானங்களை பிரிட்டன், இஸ்ரேல், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி போன்ற நட்பு நாடுகளுக்கும் F-35 ரக போர் விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்து வருகிறது.
பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் F-35 ரக விமானங்களின் விற்பனை இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.
இதனால், இந்தியா தன் வான் படைப் பலத்தை அதிகரிக்க உதவும் என்றும், குறிப்பாக சீனா மற்றும் பாகிஸ்தானின் எந்தவித அச்சுறுத்தல்களையும் தடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவிடம் இதுவரை ஐந்தாம் தலைமுறை போர் விமானம் கிடையாது. இதற்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஆயுத அமைப்புகளை இந்தியா அதிகமாகப் பயன்படுத்துவதே காரணம் ஆகும்.
சமீபத்தில், J-35A ரக விமானங்களை சீனா விண்ணில் பறக்க விட்டது. இந்தச் சூழலில், இந்தியாவுக்கு F-35 ரக விமானங்களை அமெரிக்கா விற்பனை செய்வது, இந்தியா-அமெரிக்க இராணுவ உறவில் ஒரு முக்கிய ஒத்துழைப்பாகும்.