மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரத்தை தட்டிக்கேட்ட இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அடுத்த முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய 3 பேர் சாராய விற்பனை செய்து வந்துள்ளனர். ஏற்கனவே ராஜ்குமார் கைதான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அவர் ஜாமினில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், முட்டம் வடக்குத்தெருவை சேர்ந்த ஹரீஷ் என்ற இளைஞரும், ஹரி சக்தி என்ற மாணவரும் சாராய விற்பனையை தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சாராய விற்பனை கும்பல் இரண்டு பேரையும் கத்தியால் குத்திய நிலையில், 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவத்தில் ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ள போலீசார், கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். இதனிடையே சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி உயிரிழந்தோரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள காவல்துறை, முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடைபெற்றதாக தெரிவித்துள்ளது. சாராய விற்பனை தொடர்பாக கொலை நடைபெற்றதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என விளக்கமளித்துள்ள காவல்துறை, இரு தரப்பினருக்கும் ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளதாக தெரிவித்துள்ளது.