பிரயாக்ஜில் நடை பெறும் மகாகும்பமேளாவில் , இது வரை 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
மகாகும்பமேளா உலகின் மிகப் பெரிய இந்துமத திருவிழாவாகும். பல நூற்றாண்டுகளாக இடைவிடாமல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா நடைபெற்று வருகிறது. பாரத சமுதாயம், பாரத பண்பாடு, பாரத கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கும்ப மேளா திருவிழா பாரத பாரம்பரியத்தின் சாட்சியாக இருக்கிறது.
சீனப் பயணிகள் யுவான் சுவாங் மற்றும் ஃபாஹியான், கிரேக்க பயணி மெகஸ்தனிஸ் ஆகியோர் தமது பயணக் குறிப்புகளில் கும்ப மேளா பற்றி பதிவு செய்துள்ளனர். முகலாயர்களுக்கு எதிரான நாகா சாதுக்களின் போராட்டம் தொடர்ந்த காலத்திலும் கும்ப மேளாக்கள் நடந்துள்ளன. பிறகு, முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவில் வழக்கமாக கும்பமேளாக்கள் நடைபெற்றன.
ஆங்கிலேயர் ஆட்சியிலும் நடந்த கும்பமேளாக்களை விசித்திரமாக பார்த்தார்கள். ஆனாலும், படிப்படியாக ஆங்கிலேயர்களும் கும்ப மேளா திருவிழாவில் கலந்து கொண்டனர். விடுதலை போராட்ட காலங்களில்,மக்கள் மத்தியில் தேசிய உணர்வை ஏற்படுத்த, மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட செல்வாக்கு பெற்ற தலைவர்கள் அனைவரும், கும்ப மேளா திருவிழாவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த ஆண்டுக்கான மகா கும்ப மேளா கடந்த ஜனவரி 13ம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் ராஜில் தொடங்கியது. இந்தியா மட்டுமின்றி, உலகமெங்கும் இருந்து பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர். மகர சங்கராந்தி அன்று மூன்றரை கோடி பேர் அமிர்த ஸ்நானத்தில் பங்கேற்றனர். மௌனி அமாவாசை அன்று மட்டும், ஒரே நாளில் 8 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். ஜனவரி 30 மற்றும் பிப்ரவரி மாதங்களில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.. பௌஷ் பூர்ணிமா அன்று 1.7 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். வசந்த பஞ்சமி அன்று, 2.57 கோடி பக்தர்கள் சடங்கு நீராடியுள்ளனர்.
மக பூர்ணிமாவின் குறிப்பிடத்தக்க நீராடல் திருவிழாவான திரிவேணி சங்கமத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை சுமார் 50 கோடிக்கும் மேல் திரிவேணிசங்கமத்தில் நீராடியுள்ளனர். அதேநாளில் பல்வேறு படித்துறைகளில் கங்கையை சுத்தம் செய்யும் பணியில் 300க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் பங்கேற்று மகா கும்பமேளா உலக தூய்மை பணியில் சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 110 கோடிக்கு அதிகமான குடிமக்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள். இதில், 50 கோடிக்கும் மேற்பட்ட குடிமக்கள் சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இது, மகத்தான சனாதனத்தின் மீது ஆழமான வேரூன்றிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. உண்மையான அர்த்தத்தில், இது இந்தியாவின் பொது நம்பிக்கையின் அமிர்தக் காலம் என்று தனது எக்ஸ் பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
45 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போதே 50 கோடி பேர் வந்துள்ளனர். இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் போன்ற நாடுகளின் மக்கள் தொகை, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியவர்களை விடவும் மிக குறைவு என்பது குறிப்பிடத் தக்கது.
மகா கும்ப மேளா திருவிழா முடிய இன்னும் 12 நாட்கள் உள்ளன. வரும் பிப்ரவரி 26ம் தேதி மிக சிறப்பான நாளாக உள்ளது. எனவே, கும்ப மேளாவுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.