வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது.
தமிழ்நாட்டுக்கும் காசி மாநகருக்கும் இடையேயான பண்டைய நாகரிக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு, காசி தமிழ் சங்கமம் எனும் பெருமைமிகு கலாசார நிகழ்வை நடத்தி வருகிறது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதன் தொடக்க விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,
தமிழகத்திற்கும் காசிக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது என தெரிவித்தார். மேலும் தமிழ் மொழியின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பிரதமர் மோடி செய்து வருவதாகவும் எல்.முருகன் புகழாரம் சூட்டினார்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றது மிகப்பெரும் பாக்கியம் என தெரிவித்தார். பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு உலகம் முழுவதும் மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.
பின்னர் பேசிய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியின் ஒரே பாரதம் உன்னத பாரதம் இலக்கிற்கு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி வலு சேர்ப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே காசி தமிழ்ச் சங்கமம் தொடக்க விழாவில் பாரம்பரிய மிக்க கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ்நாடிற்கும் காசிக்கும் இடையேயான 5 ஆயிரம் ஆண்டு பந்தத்தை பிரதிபலிக்கும் விதமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.