ஓமலூர் அருகே மது குடிக்க வைத்து சித்தப்பாவை தாக்கிய விவகாரத்தில் இளைஞரின் சகோதரர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் உயிருடன் வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுளளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மாட்டுகாரனூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், அவரது அண்ணன் மகன்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அவரது அண்ணன் மகன் ராஜா, மாணிக்கத்தை அழைத்து சென்று மது குடிக்க வைத்து, போதை அதிகமானதும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், மாணிக்கம் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்ததை பார்த்த ராஜா, இறந்துவிட்டதாக நினைத்து தனது அண்ணன் சுந்தரராஜிக்கு தகவல் கூறிவிட்டு தப்பியோடி இருக்கிறார்.
இதனிடையே தனது சித்தப்பாவை, தம்பி அடித்து கொலை செய்து விட்டதாக கூறி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் தஞ்சமடைந்தார். இதையடுத்து ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மாணிக்கம் உயிருடன் இருப்பது தெரிந்தது. பின்னர், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.