சென்னை குரோம்பேட்டையில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலையூர் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுல்தான் சுக்கைல் அகமது என்பவர் சென்னை பர்மா பஜாரில் கடை வைத்துள்ளார். இவர் தனது பணியாளர் ஆகாஷ் மற்றும் பிரவின் என்பவரிடம் 70 லட்சம் ரூபாய் கொடுத்து தன் உறவினர்களின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யும்படி அனுப்பியுள்ளார்.
பணத்தை எடுத்துகொண்டு இருவரும், குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி சென்று கொண்டிருந்தபோது, இரண்டு நபர்கள் அவர்களை வழிமறித்து, போலீஸ் எனக் கூறி காரில் ஏற்றிக்கொண்டு 70 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய கார்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.