குற்ற வழக்குகளின் விசாரணையில், புலன் விசாரணை அதிகாரிகள், மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் பதிவான கொலை வழக்கில் குருசாமி என்பவர் குற்றச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து காவல்துறையிடம் ஆதாரமாக வழங்கியுள்ளார். இதையடுத்து செல்போனை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும், தனது மகனை சாட்சியாக விசாரிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மனுதாரர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் செல்போன் பற்றி எதுவும் குறிப்பிடாத நிலையில், அதனை ஆதாரமாக சேர்க்க முடியாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.
அப்போது, பெரும்பாலான குற்ற வழக்குகளின் விசாரணையில், புலன் விசாரணை அதிகாரிகள், மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக கூறிய அவர், புலன் விசாரணையின்போது, சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும்படி, தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார்.