2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை வரும் மார்ச் 18-ம் தேதி முதல் டெல்லி உயர்நீதிமன்றம் தினசரி விசாரிக்கவுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாகவும், மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் மத்திய தணிக்கை துறை சுட்டிக் காட்டியது.
அதனடிப்படையில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த ஊழல் வழக்கை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அப்போது வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டில் சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த மே மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்நிலையில் 2-ஜி வழக்கில் சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவை வரும் மார்ச் 18-ம் தேதி முதல் டெல்லி உயர்நீதிமன்றம் தினசரி விசாரிக்கவுள்ளது. இந்த வழக்கின் மீது வரும் ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.