சென்னை சிட்லப்பாக்கத்தில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செம்பாக்கத்தைச் சேர்ந்த சுஹேல் அகமது என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து 70 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் அதனை தனது கடையில் பணிபுரியும் இருவரிடம் கொடுத்து வீட்டில் ஒப்படைக்க கூறியுள்ளார்.
அதன்பேரில் செல்போன் கடை ஊழியர்கள் இருவரும் சுஹேல் அகமதுவின் வீட்டுக்குச் செல்ல குரோம்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தங்களை சிட்லப்பாக்கம் போலீசார் என கூறி பையை சோதனை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் செல்போன் கடை ஊழியர்களை இருவேறு இடங்களில் இறக்கிவிட்டு 70 லட்சம் ரூபாய் பணத்துடன் அக்கும்பல் தப்பிச் சென்றது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை திருச்சி அருகே கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்குமார் என்பவரிடம் மட்டும் போலீசார் தொடர் விசாரணை நடத்திவரும் நிலையில், மற்ற நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.