மும்மொழிக் கொள்கையை புரிந்து கொள்ளாமல் விஜய் எதிர்ப்பது ஏன்? என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நடிகரும் தவெக தலைவருமான விஜய் வேட்டைக்காரன் என்கிற ஒரு திரைப்படத்தின் முதல் பாடலில் தனது மகன் ஜேஸன் சஞ்சய் அவர்களோடு நடனமாடி இருப்பார்.
அந்த பாடலில் பள்ளிச் சிறுவர்கள் கூட்டத்தின் மத்தியில் நின்று … ” ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் நீ தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும்” என்று பாடுவார்.
தமிழக மாணவர்கள் தாய்மொழியில் கல்வி கற்று தமிழ்நாட்டை உயர்த்தனும் என்று தன் மகனோடு நடனமாடி பாடிய அவர்தான்… தன் மகன் ஜேஸன் சஞ்சய் அவர்களை தமிழ்வழி சமச்சீர் பள்ளியில் சேர்க்காமல் மும்மொழி கல்வி போதிக்கும் சென்னை “அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூலில்” சேர்த்து படிக்க வைத்திருக்கிறார்.
ஆலமர பள்ளிக்கூடம் ஆக்ஸ்போர்டா மாறனும் என்று பாடி இருக்கிறாரே தவெக தலைவர் விஜய் அவர்கள்… அவர் விருப்பபடி அரசு பள்ளிகள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் போல அவருடைய மகன் ஜேஸன் சஞ்சய் பயின்ற அமெரிக்கன் இன்டர்நேஷனல் ஸ்கூல் போல கல்வித் தரத்தில் உயர வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு தான் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
அதை புரிந்து கொள்ளாமல் அவர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என தெரியவில்லை. அவர் மகனை மும்மொழி கல்வி போதிக்கும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துவிட்டு அவருடைய ரசிகர்கள் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் தமிழக குழந்தைகள் அனைவருக்கும் அதே தரத்திலான மும்மொழி கல்வியை மத்திய அரசு வழங்குவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.