அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.