செங்கல்பட்டு அருகே அரசின் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவது அம்பலமாகி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் அஸ்தினாபுரத்தில் முதியோர் உதவித் தொகை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் உதவித் தொகை வழங்க வங்கியின் ஒப்பந்த ஊழியர் எனக் கூறி சிலர், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டடத்திற்கு வந்து பணம் விநியோகித்துள்ளனர்.
திமுகவின் ஆதரவாளர் எனக் கூறப்படும் பணம் விநியோகஸ்தரிடம் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், நீங்கள் ஏன் இந்த பணத்தைக் கொடுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் அங்கிருந்த திமுக பகுதிச் செயலாளரின் ஆதரவாளர் ஒருவர், முன்பு இந்த உதவித்தொகை கொடுக்க 50 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது இருபது ரூபாய் தான் வழங்குவதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி, மாநகராட்சிக்குச் சொந்தமான அறையின் ஓரத்தில் பொதுமக்களுக்கு பொங்கலுக்குக் கொடுக்க வேண்டிய ரேஷன் புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தையும் அம்பலப்படுத்தினார்.
இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் திமுகவினர் லாபம் பார்ப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.