100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிளிப்கார்ட் மற்றும் ஓலா நிறுவனம் பதிலளிக்க நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த சுதேஸ்வரன் என்பவர், பிளிப்கார்ட் இணையதளம் மூலம் ஓலா நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தைப் பெற கடந்த ஆண்டு 87 ஆயிரம் ரூபாய் செலுத்தி விண்ணப்பித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து குமாரபாளையம் ஷோரூமில் வாகனத்தை டெலிவரி எடுத்துள்ளார். பின்னர், மானியத் தொகை பெறுவதற்கு நேரில் வந்து புகைப்படம் எடுத்து ஒப்புதல் வழங்க வேண்டுமென ஷோரும் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரில் சென்று விசாரித்தபோது மானியத் தொகை நிறுவனத்திற்கானது எனக் கூறியதாகத் தெரிகிறது.
சுதேஸ்வரன் அதற்கு ஒப்புக் கொள்ளாததால் அவரது வாகனத்தை லாக் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்திக்குள்ளான அவர், தம்மைப் போல பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆயிரக்கணக்கான நுகர்வோர்களுக்கு இழப்பீடாக 100 கோடி ரூபாயை ஓலா நிறுவனம் வழங்க வேண்டும் எனக்கோரி நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 48 மணி நேரத்தில் சுதேஸ்வரனின் வாகனம் இயங்கும்படி சென்சார் லாக்கை நீக்க வேண்டும் என்று ஓலா நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், இதுதொடர்பாக பிளிப்கார்ட் நிறுவனத்திற்கும், ஓலா நிறுவன ஷோரூமிற்கும் நோட்டீஸ் அனுப்பி மார்ச் 13ஆம் தேதி பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.