மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதையை எழுத தொடங்கியுள்ளதாக, அவரது நெருங்கிய நண்பர் காலச்சக்கரம் நரசிம்மா தெரிவித்துள்ளார்.
தி இந்து நாளிதழின் முன்னாள் நிர்வாக ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான காலச்சக்கரம் நரசிம்மா தமது முகநூல் பக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைவரும் விரும்பும் தலைவராக திகழ வேண்டுமென்றால், அனைவரையும் அனைத்து நேரங்களிலும், ஏதாவது ஒரு வழியில் திருப்திப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், அதனால் எந்தவித சாதனைகளையும் செய்ய முடியாமல் போய்விடும் எனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இப்போது அனைவராலும் வெறுக்கப்படுவது குறித்து தாம் கவலைப்படவில்லை என்று ஜெயலலிதா தம்மிடம் கூறியதாக பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் அம்மா இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா என மக்கள் ஏங்குவார்கள், அதுதான் சரியான தருணம் என்றும், அப்போது தனது வாழ்க்கை சரிதையை எழுதத் தொடங்குகள் எனவும், நட்புரீதியான சந்திப்புகளில் கடைசி சந்திப்பின்போது ஜெயலலிதா தம்மிடம் கூறிய வார்த்தைகள் என்றும் காலச்சக்கரம் நரசிம்மா தெரிவித்திருக்கிறார்.
நேற்று முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சரிதையை எழுத தொடங்கிவிட்டதாகவும், லேடி ஜெ ஜெ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலைப்பை மறைந்த ஜெயலலிதா தேர்ந்தெடுத்ததாகவும் காலச்சக்கரம் நரசிம்மா குறிப்பிட்டுள்ளார்.