காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார் .
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடக் கோரி. சென்னை உயர்நீதிமன்றத்தில், தொடரப்பட்ட வழக்கில், கடந்த 28.10.2024 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்கள், சமூகப் பிரிவு உள்ளிட்ட 15 விவரங்களையும் இறுதிப் பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரையிலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்ததாக தெரிவித்துள்ளர்.
ஆனால், சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக காவல்துறை பணிக்காகத் தங்களைத் தயார் செய்து, அனைத்துத் தேர்ச்சி முறைகளிலும் வெற்றி பெற்று, பணி ஆணை பெறக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன என்றும், காவல்துறை பணிகளும் விலக்கல்ல என்பதுதான், உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு, காலதாமதமாக்குவதன் மூலம் தெரிய வருவதாகம் அவர் கூறியுள்ளார்.
தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து. காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், திமுக அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால், இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை அனுமதிக்க முடியாது என்றும், இனியும் காலதாமதமாக்காமல், உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இனி வருங்காலங்களிலும், இந்த நடைமுறையைத் தொடர வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.