தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல்
வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.
அண்மையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் வந்த ஜெகதீஸ்வரன், சிறுமியை தஞ்சாவூருக்கு அழைத்தார். இதையடுத்து தஞ்சாவூர் வந்த சிறுமியை அவர் சந்திக்க மறுத்ததால், அதிர்ச்சிக்குள்ளான சிறுமி புதிய பேருந்து நிலையம் அருகே அழுது கொண்டே இருந்துள்ளார்.
இதையறிந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் புவனேஸ்வரன், சிறுமியை காதலனுடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர், சிறுமியை சென்னைக்கு பேருந்து ஏற்றிவிட வந்தபோது போலீஸாரிடம் அவர் சிக்கினார். புவனேஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இதேபோல சிறுமியை ஏமாற்றிய காதலன் ஜெகதீஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.