சென்னை ரேஸ் கிளப்பில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், நீர்நிலை அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ரேஸ் கிளப்பில், குதிரை பந்தய சுற்றுப்பாதையின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கோல்ஃப் மைதானத்தை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.
ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, ரேஸ் கிளப்பின் சில வாயில்களை சீல் வைத்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் ஜிம்கானா கிளப் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, கோல்ஃப் மைதானத்தில் குளங்களை அமைப்பதற்கான பணிகளுக்கு தடைவிதிக்க கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதின்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குத்தகைக்கு வழங்கிய நிலத்தை அரசு மீண்டும் எடுத்து கொள்ளும்போது ஜிம்கானா கிளப்புக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டிய அவசியமில்லை என கூறினார். மேலும், வழக்கில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.