மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதி ஜேசு ராஜா, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆழ்கடல் திட்டம் தொடர்பாக பெறப்பட்ட வங்கிக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த முதலமைச்சரை சந்தித்து பேசியதாக தெரிவித்தார்.
அப்போது கடன் தள்ளுபடி குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பரிசீலணை செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக அவர் கூறினார்.