சேலத்தில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சேலம் மணியனூர் சந்தை அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும் அதன் எதிரே அரசு துவக்க பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
வகுப்புகள் முடிந்து பள்ளி மாணவர்கள் வீடு திரும்பும்போது, அவர்களிடம் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை ஒரு கும்பல் வாடிக்கையாக மேற்கொண்டு வந்துள்ளது.
இரவு மற்றும் விடுமுறை நாட்களிலும் தொடரும் இந்த போதைப்பொருட்கள் விற்பனை குறித்த புகைப்படங்கள் அண்மையில் சமூக வலைதளங்களிலும் வைரலானது. இதுபற்றி அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கஞ்சா விற்பனை குறித்து அன்னதானப்பட்டி போலீசாரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கஞ்சா விற்பனை தடுக்க போலீசார் தவறிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், அரசு பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.