சென்னையில் இந்திய கடற்படையின் சிம்ஃபோனிக் பேண்ட் இசை கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தமிழ்நாடு, புதுச்சேரி மண்டல கடற்படை சார்பில் இந்திய கடற்படையின் பாரம்பரியமிக்க சிம்போனிக் பேண்ட் குழுவினரின் இசை நிகழ்ச்சி, சென்னை அடையாறில் உள்ள INS கடற்படை தளத்தில் பிரம்மாண்டமாக ஒருங்கிணைக்கப்பட்டது.
கிழக்கு கடற்படை கமாண்டிங் அதிகாரி சதீஷ் ஷெனாய், பத்ம பூஷன் நல்லி குப்புசாமி செட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கடற்படை மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள், அவர்களின் குடும்பத்தார் என பலர் கலந்துகொண்ட நிலையில், பிரபல திரைப்படங்களின் பின்னணி இசையை வாசித்தபடி நிகழ்ச்சி தொடங்கியது.
ஹாலிவுட் உலகில் தவிர்க்க முடியாத திரைப்படமாக கருதப்படும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் பின்னணி இசை வாசிக்கப்பட்டது, அங்கு திரண்டிருந்த பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
பார்வையாளர்கள் இசை வெள்ளத்தில் மூழ்கி திளைத்துக்கொண்டிருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒருவர், மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்று படமான அமரனில் இடம்பெற்ற ‘ஹே மின்னலே’ பாடலை பாடி அசத்தினார்.
அதேபோல, பிரபல இசையமைப்பாளர் கே.எல்.கிங் இசையமைத்த ‘TWO LITTLE FINCHES’ பாடலின் பின்னணி இசையை கலைஞர்கள் இசைக்க, ஒரு கலைஞர் தனித்துவமாக புல்லாங்குழலை வாசித்து மெய்சிலிர்க்க வைத்தார். அதே சமயத்தில் பார்வையாளர்களுக்கிடையே ஒருவர், இசை கலைஞருக்கு ஈடாக புல்லாங்குழலை வாசிக்க, யார் அது என்பதைப்போல் நாடகமாடி அவரை மேடைக்கு அழைத்து இருவரும் சேர்ந்து புல்லாங்குழலை வாசித்த காட்சி அனைவரையும் எதிர்பார்ப்பு நிறைந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இப்படி பாலிவுட், ஹாலிவுட் படங்களின் பின்னணி இசைகளை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக இசைத்து, அங்கிருந்தவர்களுக்கு இசையின் பிரம்மாண்டத்தை உணர்த்தினார்கள் சிம்ஃபோனிக் பேண்டின் இசை கலைஞர்கள். இறுதியாக கமல்ஹாசன் நடிப்பில், இளையராஜா இசையில் பிளாக் பஸ்டர் திரைப்படமாக வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ படத்தின் தீம் பாடல் இசைக்கப்பட்டது இசைக் கச்சேரிக்கு SIGNATURE FINISH ஆக அமைந்தது என்றே கூறலாம்.
வெயில், மழை என பாராமல் கடலில் தங்கள் வாழ்நாட்களை கடத்தும் கடற்படை வீரர்கள் நம்மை பாதுகாப்பதை தாண்டி, இசையாலும் நம்மை மகிழ்விக்க ஒருங்கிணைத்த முயற்சிக்கு ஒரு ராயல் சல்யூட் கொடுக்கலாமே..