நவீன யுகத்தின் அவதார புருஷராக, உலகெங்கிலும் கோடிக் கணக்கான மக்களால் போற்றப் படும் ஸ்ரீராமகிருஷ்ணரின் பிறந்த நாள் இன்று. கடவுளை உணர்தல் என்பது மட்டுமே மனிதனுக்கு உயர்ந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும் என்று நல்வழிகாட்டிய அந்த அவதார புருஷர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கொல்கத்தாவின் வடமேற்கில் சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் காமர்புகூர் என்னும் சிறிய கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில், ஏழ்மையான நிலையில் குதிராம் சட்டோபாத்யாயா- சந்திரமணி தேவி தம்பதியர் வாழ்ந்து வந்தனர். வறுமையில் இருந்தாலும் பக்தியும் உண்மையும் கடைபிடித்து வந்த இந்த தம்பதியருக்கு 1836- ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி, நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்குக் கதாதர் என்று பெயர் வைத்தனர்.
கிராமத்தின் செல்லப்பிள்ளையாக விளங்கிய கதாதர் சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் தெய்வச் சிலைகள் செய்வதிலும் ஆர்வம் காட்டினான்.
பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாகக் கருதிய கதாதர், பள்ளி செல்லவில்லை. மாறாக, இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்து வந்தான். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்த கதாதர்தான் உலகமே போற்றி வணங்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண பரஹம்சராக தெய்வமாக உள்ளார்.
இராமகிருஷ்ணருக்குப் பதினேழு வயதான போது, குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமானது. இராமகிருஷ்ணரின் அண்ணன் ராம்குமார், தட்சினேஸ்வர் காளி கோயிலில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார்.
அண்ணனுக்குச் சிறு சிறு வேலைகள் செய்ய தட்சினேஸ்வர் வந்த இராமகிருஷ்னர், அண்ணனின் மறைவுக்குப் பிறகு காளி கோயிலின் பூசாரியானார்.
காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். இங்கு தான் இராமகிருஷ்ணர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
தினந்தோறும் பூசை செய்து வந்த இராமகிருஷ்ணருக்கு வெறும் கல்லுக்குப் பூசை செய்கிறோமா, அல்லது உண்மையிலேயே காளிக்குப் பூஜை செய்கிறோமா என்ற கேள்வி எழுந்தது. தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார்.
மேலும் தினந்தோறும் இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் இராம கிருஷ்ணரின் தியான முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை.
ஒரு நாள் பொறுமையை இழந்த இராமகிருஷ்னர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே வெட்டிக் கொண்டு உயிர்விட தயாரானார்.
ஆனால், வாளை எடுத்தவுடன், சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி தம்மை ஆட்கொண்டதாகவும் பின்னாளில் இராம கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காட்சிக்குப் பிறகு ராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவரது தாயார் மகனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று பதறினார். அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகும் என்று நினைத்தார்.
கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தம்மை மணம் புரிய பிறந்தவள் என்று இராம கிருஷ்ணர் கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ராமகிருஷ்ணர் மனைவியையும் காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து,மனைவி கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
தோதா புரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற இராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்தார். அதன் பிறகு ஸ்ரீ ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்துதியானம் செய்து,அவர்களையும் நேரில் கண்டார்.
இதையெல்லாம் கேள்விப்பட்டு, பலர் அவரைப் பார்க்க கூட்டம் கூட்டமாக வந்தனர்.நாட்கள் செல்லச் செல்ல, இராமகிருஷ்ணரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் அவர் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள், நிகழ்த்தி வந்தார்.
அடிக்கடி ராமகிருஷ்ணரைப் பார்க்க வந்த மகேந்திரநாத் குப்தா, என்பவரும் தினமும் இராமகிருஷ்னர் கூறியவற்றையும் அவர் புரிந்த விவாதங்களையும் வீட்டுக்குத் திரும்பியவுடன் தன் டயரியில் குறிப்பெடுத்துக் கொண்டார்.
இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. அந்த நூல் தான் தமிழில் இராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கடைசி நாட்களில் ஸ்ரீ இராம கிருஷ்ணருக்குத் தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டது. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒப்பற்ற ஆன்மிக குருவாக விளங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணர் தனது 50வது வயதில், 1886 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி மகா சமாதி அடைந்தார்.