லாட்டரி அதிபர் மார்ட்டினின் சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து மார்ச் 4ம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லாட்டரி மார்ட்டின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வழக்கில் முடிவெடுக்கும் முன்பு முடக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வது முறையல்ல என வாதிடப்பட்டது.
இதை தொடர்ந்து முடக்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அதிகாரம் உள்ளதாகவும், பறிமுதல் நடவடிக்கை துவங்கும் முன்பு உரிய நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சொத்துக்களை பறிமுதல் செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுவிட்டதா என அமலாக்கத்துறையிடம் கேள்வி எழுப்பினர்.
மார்ச் 4ம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்தனர்.