பிரக்யாராஜ்ஜில் நடைபெறும் கும்பமேளாவில் புனித நீராடும் பக்தர்கள், அயோத்திக்கும் செல்வதால் ராமர் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது. இது நம்பிக்கையின் மீதான மரியாதை மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வெளிக்காட்டுவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உத்தரப்பிரதேச மாநில பிரயாக் ராஜில், உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளா பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கிய மகா கும்ப மேளா வரும் பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதுவரை சுமார் 53 கோடிக்கும் மேலான பக்தர்கள், மகா கும்ப மேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளா நிறைவடைய இருப்பதால், பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மகா கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்கள், அயோத்தி இராமர் கோயிலையும்,அனுமன் கோயிலையும் தரிசனம் செய்கின்றனர். இராமர் கோயிலுக்கு வந்து ஸ்ரீ இராமரையும், அனுமனையும் தரிசனம் செய்யும் பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடி வழிபாடு செய்கின்றனர். மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜிலிருந்து அயோத்தி நகரம், சுமார் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அயோத்திக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அயோத்தி, இராமர் கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
இந்தச் சுழலில், சிறந்த பாதுகாப்பை வழங்கவும், சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்யவும், அயோத்தி நகரம் ஆறு மண்டலங்களாகவும் 11 துறைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளதாக அயோத்தி காவல் கண்காணிப்பாளர் மதுவன் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும், மண்டல அளவில் காவல் கண்காணிப்பாளர்களும், துறை அளவில் துணை கண்காணிப்பாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அயோத்திக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை 2016-17 ஆம் ஆண்டில் 2.35 லட்சமாக இருந்தது என்றும் 2024 ஆம் ஆண்டில் 14-15 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், இது நம்பிக்கையின் மீதான மரியாதை மற்றும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியையும் வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த 8 ஆண்டுகளில் உத்தர பிரதேச மாநிலம் மிகப் பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொண்டுள்ளதாகவும்,அதேநேரம், பண்டிகைகளில் , சீனப் பொருட்களைப் பரிசளிக்காமல் ,ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ், உள்ளூர் பொருட்களையே மக்கள் பரிசளிக்கின்றனர் என்றும் உத்தர பிரதேச முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரயாக் ராஜ், வாரணாசி மற்றும் அயோத்தி ஆகியவை இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்தியுள்ளன என்றும், மகா கும்ப மேளாவை எதிர்ப்பவர்களை விட அதன் மூலம், இந்திய பொருளாதாரம் மேம்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல்வர், இந்தியாவின் நம்பிக்கையை காட்டுவதன் மூலம் பக்தர்கள் தங்கள் பலத்தை உலகத்துக்கு உணர்த்தியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.