சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களைத் தாக்கினர். அந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில், கருப்பு பேட்ஜ் அணிந்து நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். மேலும் பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உரிமையியல், சார்பு உள்ளிட்ட நீதிமன்றங்களில் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த 15 நீதிமன்றங்களை சேர்ந்த ஆயிரத்து 300 வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.